Tuesday, June 9, 2026

ரியல் எஸ்டேட் சட்டத்தை பயன்படுத்துவதில் கவனம் தேவை!

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்களிடம் இருந்து மக்கள், வீடு, மனைகளை வாங்குகின்றனர்.  இவ்வாறு, அதிக தொகை செலுத்தி, வீடு, மனை வாங்கும் போது அதற்கான விற்பனையாளர்கள் சரியாக செயல்பட வேண்டும்.

இதில் சொத்து விற்பவர்கள் ஒப்புக் கொண்டபடி நடக்காவிட்டால், பணம் செலுத்துவருடன் பிரச்னை ஏற்படுகிறது.  உதாரணமாக, ஒரு ஆண்டில், வீட்டை ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்த நிறுவனம் அதன்படி செயல்பட வேண்டும்.

ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான செயல்படாத நிலையில், அதிலிருந்து விலக, மக்களுக்கு உரிமை உள்ளது.  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் வாயிலாக மக்களுக்கு இந்த உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில், வீடு, மனை வாங்குவோரில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அறியாமல் உள்ளனர்.  மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், இதை அமல்படுத்த மாநில அளவில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நீங்கள் புதிதாக வீடு, மனை வாங்குவதாக இருந்தால், அத்திட்டம், ரியல் எஸ்டேட் சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.  அத்திட்டத்தை முடிப்பதற்கான கால வரம்பு என்ன என்பதை உரிய தகவல்களுடன் சரி பார்க்க வேண்டும்.

இந்த கால வரம்புக்கு உட்பட்ட வகையிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தம் அமைய வேண்டும்.  ரியல் எஸ்டேட் ஆணையத்தில் குறிப்பிடப்பட்ட கால வரம்புக்கு அப்பால் செல்லும் வகையில் ஒப்பந்தத்தின் கால வரம்பு செல்வது நல்லதல்ல.

குறிப்பாக, நீங்கள் வீடு, மனை வாங்க தேர்வு செய்யும் திட்டத்தில் ஏற்கனவே, நடந்த பரிமாற்றங்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதையும் மக்கள் கவனிக்க வேண்டும்.  அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், ஒப்பந்தத்தில் உறுதி அளித்த வசதிகள் குறைந்தாலும் ரியல் எஸ்டேட் ஆணையத்தை மக்கள் அணுகலாம்.

இவ்வாறு ரியல் எஸ்டேட் ஆணையத்தை அணுகும் போது, உரிய படிவங்களில் மக்கள் தங்கள் பிரச்னைகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.  இது விஷயத்தில் சட்ட விதிகளின் அடிப்படையில் வாதங்களை எடுத்துவைக்க வழக்கறிஞர்களின் உதவியை பயன்படுத்துவதில் தவறு இல்லை.

ஆனால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மக்கள் தெரிவிக்கும் புகார்களின் உண்மை தன்மை மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் தனது தரப்பு வாதத்தை தெரிவிக்கவும் உரிய கால அவகாசம் அளித்து அதன் அடிப்படையில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

எனவே, சட்டப்படி கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மக்கள் முறையாக பயன்படுத்தி உரிய நிவாரணம் தேட வேண்டும்.  இதை தவறாக பயன்படுத்தும் நோக்கில் புகார் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

No comments:

Post a Comment