புதிதாக ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் அனைவரது கவனமும் அதன் வடிவமைப்பு, உறுதி தன்மை, வெளிப்புற தோற்றம் சார்ந்த விஷயங்களில் தான் செல்கிறது. இதற்கு அப்பால், கட்டடத்தில் பல்வேறு விஷயங்களில் உரிய கவனம் செலுத்தினால், பாதுகாப்பான வீடு கிடைக்கும்.
குறிப்பாக, புதிய வீட்டுக்கான மின்சார தேவை என்ன என்பதை வல்லுனர் வழிகாட்டுதலுடன் கணக்கிட்டு அதற்கு ஏற்ற இணைப்பை பெற வேண்டும். இது மட்டுமல்லாது, உங்களுக்கான புதிய வீட்டில் மின்சார பயன்பாட்டுக்கான இணைப்புகள் எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பாருங்கள்.
குறிப்பாக, புதிய வீடு கட்டும் போதே, எந்தெந்த இடத்தில் விளக்குகள் அமைய வேண்டும், மின் விசிறி, ஏசி பாயிண்ட்கள் அமைய வேண்டும் என்று பாருங்கள். இது மட்டுமல்லாது, ஒவ்வொரு அறையிலும் என்னென்ன மின் சாதனங்கள் பயன்படுத்த போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இத்துடன் ஒவ்வொரு அறையிலும் மின் சாதனங்களுக்கான சுவிட்ச்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை உணர்ந்து செயல் படுங்கள். பொதுவாக, தரையில் இருந்து சற்று உயரத்தில் சுவிட்ச்களை அமைக்க வேண்டும் என்று தான் பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், இந்த உயரம் துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, வீட்டின் பிரதான அறையில் அமைக்கப்படும் சுவிட்ச் பாக்ஸ்சில் வெளிப்புற விளக்குகளுக்கானதாக இருக்கும்.
பெரும்பாலும் வரவேற்பு அறையில் பிரதான வாயில் கதவுக்கு மிக அருகில் இதற்கான சுவிட்ச்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதில் தரையில் இருப்பது, 52 முதல் 60 அங்குலம் உயரத்தில் இந்த சுவிட்ச்களுக்கான பாக்ஸ்கள் அமைவது அவசியம்.
இதில் குறிப்பிட்ட சில வெளிப்புற விளக்குகளுக்கான சுவிட்ச்களை வெளியில் இருந்தும், உட்புறம் இருந்தும் பயன்படுத்தும் வகையில் அமைப்பது நல்லது. குறிப்பாக, நீங்கள் வெளியில் சென்றுவிட்டு இரவில் தாமதமாக வரும் போது, வெளிப்புறத்தில் சுவிட்ச் இருப்பது உதவியாக அமையும்.
இதற்கு அடுத்தபடியாக, வரவேற்பு அறை, உணவு அருந்தும் அறை ஆகியவற்றுக்கான மின்சார இணைப்பு சுவிட்ச்கள், தரையில் இருந்து, 42 முதல், 48 அங்குலம் உயரத்தில் அமைய வேண்டும். அப்போது தான் இவற்றை தேவைக்கு ஏற்ப எளிதாக பயன்படுத்தலாம்.
இதேபோன்று சமையலறையில், மேடைக்கு மேல் வைத்து மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். இதற்கான சுவிட்ச்கள், சமையலறையின் மேடையின் மேற் பரப்பில் இருந்து, ஆறு முதல், ஒன்பது அங்குலம் உயரத்தில் அமைய வேண்டும்.
படுக்கை அறையில் படுக்கைக்கு பக்கத்தில், வரவேற்பு அறையில் சோபாவுக்கு பக்கத்தில் சுவிட்ச்கள் அமைப்பது என்றால் அது தரையில் இருந்து, 24 முதல், 30 அங்குலம் உயரத்தில் அமைப்பது அவசியம். இந்த உயரத்தில் இருந்தால் எவ்வித சிரமமும் இன்றி நீங்கள் பயன்படுத்த முடியும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.

No comments:
Post a Comment