புதிதாக வீடு கட்டும் போது அதன் அடிப்படை ஆதாரங்கள் தொடர்பான விஷயங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக, கட்டடத்தின் அஸ்திவாரம், தூண்கள், பீம்கள், மேல்தளம், தரை போன்ற இடங்களில் எவ்வித குறைபாடும் ஏற்பட கூடாது என்பதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக பெரிய கட்டுமான நிறுவனங்களும் கட்டடங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மிக உறுதியாக அமைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில், தனியாக வீடு கட்டுவோரும் கட்டடத்தின் உறுதி தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.
பெரும்பாலான சமயங்களில் கட்டடங்கள் உறுதியாக இருப்பது சாத்தியமாகிறது என்றாலும், பயன்பாட்டு நிலையில் புதிய பிரச்னைகளும் வருகின்றன. புதிய வீட்டை கட்டும் போது அதன் வெளிப்புற தோற்றம் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதற்காக கட்டடங்கள் கட்டும் போது அதன் முப்பரிமான வடிவமைப்பை முன்கூட்டியே தயாரித்து பார்க்கும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாக வீடு கட்டும் போது அதி மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் தடையின்றி பயன்படுத்த உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
புதிய கட்டடங்கள் கட்டும் போது சுவர்களின் விளிம்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெரும்பாலான கட்டடங்களில் சுவர் விளிம்பு பகுதிகள் கூர்மையாக அமைக்கப்படுகிறது.
இப்படி கூர்மையாக இருந்தால் தான் பணிகள் முறையாக நடந்துள்ளது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு இந்த விஷயம் மாறியுள்ளது. இயந்திரங்கள் தயாரிப்பில் அவசிய தேவை அடிப்படையில் மட்டுமே கூர்மையான விளிம்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன, அதிலும் தற்போது கூர்மையான விளிம்புகள் தவிர்க்கப்படுகின்றன.
ஆனால், வீட்டுக்கான கட்டுமான பணியில் சுவர்கள், சமையலறை மேடை, மொட்டை மாடி கைப்பிடி சுவர், அலமாரிகள் போன்ற இடங்களில் கூர்மையான விளிம்புகள் தான் அழகு என்ற எண்ணம் உள்ளது. ஆனால், பயன்பாட்டு நிலையில் இது போன்ற கூர்மையான பாகங்கள் விபத்துகளை ஏற்படுத்த கூடியது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
கட்டடத்தில் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் விளிம்புகளை கூர்மையாக அமைப்பதை தவிர்த்து, அரைவட்ட அளவுக்கு மாற்றி வடிவமைக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் உள்ள வீடுகளில் கூர்மையான விளிம்புகளால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை புரிந்து மக்கள் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:
Post a Comment