Tuesday, March 31, 2026

வீடு, மனை வாங்க ரொக்கமாக முன்பணம் கொடுக்காதீர்!

இன்றைய சூழலில், எப்படியாவது வீடு அல்லது காலி மனை வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் முயற்சிக்கின்றனர்.  இதற்கான தேடலில் தெரிய வரும் விஷயங்கள் அடிப்படையில் முடிவுகள் எடுத்து அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.

சொத்து வாங்குவது, விற்பதில் தான் பல்வேறு நிலைகளில் கருப்பு பணம் 
புழங்குவதாக புகார்கள் கூறப்படுகின்றன.  இதை கட்டுப்படுத்த வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சொத்து பரிமாற்றத்தில் ரொக்கப் பணத்தை தவிர்ப்பது ஒரு வகையில் பாதுகாப்பான நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, ஒரு திட்டத்தில் ஒரு காலி மனையை வாங்க நீங்கள் முடிவு செய்து, அதன் விலையில் ஒரு பகுதியை முன்பணமாக கொடுக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் முடிவு செய்ததைவிட கூடுதல் விலைக்கு வேறு நபர் கேட்டால் ரியல் எஸ்டேட் நிறுவனம் அவருக்கு அதை கொடுக்கவே விரும்பும்.  இந்த அடிப்படை விஷயத்தை வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்க நீங்கள் முடிவு செய்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.  இதை நீங்கள் தெரிவித்தால், சொத்தின் விலையில் 10 சதவீத தொகையை முன்பணமாக கொடுத்து, ஆவணங்களை வாங்கி செல்லுங்கள் என்று உரிமையாளர்கள் கூறுவது வழக்கம்.

இதில் வீட்டின் விலையில் முன்பணமாக எவ்வளவு தொகையை கொடுப்பது என்பதில் வீடு, மனை வாங்குவோருக்கு தெளிவு வேண்டும்.  சொத்துக்கான முன்பணம் கொடுக்கும் போது மக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சொத்தின் உண்மை தன்மையை சரி பார்க்காமல் பெரிய தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.  இதில் ஆவண பிரதிகளை சரி பார்ப்பதற்காக கொடுக்க வேண்டும் என்றால், டோக்கன் அட்வான்ஸ் என்ற பெயரில் அடையாள முன்பணமாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள்.  இதற்கு, 10,000 முதல், 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.


விலையுடன் ஒப்பிட்டால் இது மிக மிக சிறிய தொகையாக தெரிந்தாலும், இத்தொகையை ரொக்கமாக கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.  இத்தொகையை காசோலை அல்லது இணையவழியில் உரிமையாளர் கணக்குக்கு மாற்றம் செய்யலாம்.

மேலும் இது போன்ற தொகையை கொடுக்கும் போது அதையும் ஒரு பத்திரத்தில் எழுதி உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  சில சமயங்களில் நீங்கள், 50,000 ரூபாய் கொடுத்து ஆவணங்களை வாங்கி சென்று இருப்பீர்கள், அதற்குள் வேறு நபர் அந்த வீட்டை வாங்க ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது.

இது போன்ற நிலையில் சிலர் மட்டுமே அடையாள முன்பணத்தை திருப்பி கொடுப்பார்கள்.  பெரும்பாலான நபர்கள் அடையாள முன்பணத்தை திருப்பி கொடுப்பதில்லை என்பதால், சொத்து வாங்குவதற்கான அனைத்து நிலையிலும் ரொக்க பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட்  சொத்து மதிப்பீட்டாளர்கள்.

No comments:

Post a Comment