Tuesday, March 10, 2026

நிலத்துக்கு சரியான மதிப்பை அறிவதற்கான வழிமுறை என்ன?

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதன் விலை விஷயத்தில் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.  இதில் ஒரு சொத்துக்கு விற்பனை விலை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, தமிழகத்தில் அசையா சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பு ஆகிய இரண்டு வகை மதிப்புகள் நடைமுறையில் உள்ளன.  இதில் பத்திரப்பதிவு பணிகள் வழிகாட்டி மதிப்புகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆனால், உண்மையாக விலை பேசுவது, பணம் கைமாறு போன்ற நடவடிக்கைகள் சந்தை மதிப்பு நிலவர அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.  ஒரு சொத்து அமைந்துள்ள இடம், அங்கு காணப்படும் வசதிகள் அடிப்படையில் பதிவுத்துறையால் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இந்த மதிப்புகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.  ஆனால், பத்திரத்தில் குறிப்பிடுவதற்கு மட்டுமே இந்த மதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதே நேரத்தில் சொத்து வாங்குவோர், விற்பனையாளர் சொல்லும் விலை சரியானது தானா என்பதை அறிய, அந்த பகுதியில் சொத்து விற்பனை குறித்த சந்தை நிலவரத்தை ஆராய வேண்டும்.  ஒரு குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்கள் மனைப்பிரிவுக்கு விலையாக தெரிவிக்கும் தொகை சரியானதா என்பதை ஆராய வேண்டும்.

இதில், அந்த ஊருக்கு நீங்கள் நேரில் சென்று பிற பகுதிகளில், நிலம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.  இவ்வாறு விசாரணையில் தெரியவரும் விபரத்துடன் ரியல் எஸ்டேட் நிறுவனம் சொல்லும் மதிப்பு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள்.

பொதுவாக புதிய மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்பு தனியாக நிர்ணயிக்கப்படும் என்றாலும், சந்தை மதிப்பு என்பது அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விருப்பமாக அமைந்துவிடும்.  எனவே, சந்தை நிலவரத்தின் உண்மை நிலவர அடிப்படையில் மனைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இதில் சந்தை நிலவரத்துக்கு சம்பந்தம் இல்லாத வகையில், அதிக பட்ச விலை கூறப்பட்டால் அதில் பணத்தை செலவிடுவது நல்லதா என்று பார்க்க வேண்டும்.  போலியான சந்தை மதிப்பு அடிப்படையில் கூறப்படும் விலையை நம்பி முதலீடு செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.

எனவே, வீடு, மனை வாங்கும் போது அதற்கான விலை, சந்தை நிலவரத்தின் உண்மையான பிரதிபலிப்பா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.  இதில், தெரியவரும் தகவல்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத நிலையில், என்ன செய்வது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment