நம்மில் பெரும்பாலான மக்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது சொத்து வாங்க முடியாதா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இதற்கான நிதியை திரட்டுவதற்காக மக்கள் பல்வேறு நிலைகளில் கடினமாக உழைக்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதனால், நீங்கள் சொத்து வாங்கும் போது அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதில் விற்பவரின் உரிமை தொடர்பான விஷயங்களை மட்டும் சரி பார்த்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், ஒரு சொத்தை வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால், அதை உங்கள் பெயருக்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கான கிரையப்பத்திரம் எப்படி இருக்க வேண்டும், அதை யார் வாயிலாக தயாரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது பெரும்பாலான மக்கள் ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் வாயிலாக கிரையப்பாத்ரம் தயாரிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்த பத்திரம் தயாரிப்பு பணிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு பதிவுத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
உங்கள் பெயருக்கு பதிவு செய்ய வேண்டிய பத்திரத்தை தயாரிக்கும் போது அதில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு பத்திரம் தயாரிக்கப்பட்ட நிலையில் அதை பயன்படுத்தும் முன் மூன்று விஷயங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
அந்த சொத்து குறித்த வில்லங்க சான்றிதழ் விபரங்களை, குறைந்தபட்சம், 30 ஆண்டுகளுக்கு சரி பார்க்க வேண்டியது அவசியம். அப்போது, பழைய பரிமாற்றங்களில் ஏதாவது முரண்பாடுகள் இருக்கிறதா என்ற விபரம் வெளிப்படையாக தெரியவரும்.
இதற்கு அடுத்தபடியாக, விற்கப்படும் சொத்தின் அளவு பத்திரத்திலும், நேரிலும் சரியாக இருக்கிறதா என்பதை அளந்து சரி பார்க்க வேண்டும். இதில் பட்டாவுடன் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்வது கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சில இடங்களில் பத்திரத்தில் உள்ளது போன்று நிலத்தின் அளவு அளந்து பார்க்கும் போது உறுதியாகும். ஆனால், பட்டாவில் அதைவிட குறைவாக இருக்கும் நிலையில், இந்த வேறுபாடு எதனால் ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
சொத்தின் சர்வே எண், இருப்பிட முகவரி, போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை மிக மிக துல்லியமாக சரி பார்க்க வேண்டியது அவசியம். உங்கள் பெயருக்கு மாற்றப்படும் சொத்து குறித்த, 100 சதவீத விபரங்களையும் சரி பார்க்காமல் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்காதீர் என்கின்றனர் ஆவண எழுத்தர்கள்.

No comments:
Post a Comment