ரெடிமேட் விலைப்பட்டியலுடன் பேக்கேஜ் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், கள ஆய்வில் கவனம் செலுத்துவதில்லை, இவர்களை பயன்படுத்தினால், கட்டுமான பணிகள் திருப்திகரமாக அமையாது.
நிலம் வாங்கி வைத்து இருக்கிறோம், அதில் எங்களுக்கு ஏற்ற வகையில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் பில்டர்களை, மக்கள் தேடி வருகின்றனர். காலி நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று பில்டரை தேடும் மக்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இதில் உள்ளூரில் செயல்படும் கட்டுமான பொறியாளர்களை அணுகினால், அவர்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உத்தேச விலைப்பட்டியலை கொடுப்பார்கள். இதில் பெரும்பாலான நில உரிமையாளர்கள் குறைந்தபட்சம், ஐந்து அல்லது ஆறு பேரிடம் கொட்டேஷன் எனப்படும் உத்தேச விலைப்பட்டியல் வாங்குகின்றனர்.
ஆனால், இவ்வாறு கிடைக்கும் உத்தேச விலைப்பட்டியல்கள் பெரும்பாலும் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை. இதற்கு காரணம், பெரும்பாலான பில்டர்கள், கட்டுமான பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை நேரில் பார்க்காமல், விலைப்பட்டியல் கொடுக்கின்றனர்.
இவ்வாறு கொடுக்கப்படும் விலைப்பட்டியல் அடிப்படையில் எப்படி வீடு கட்டி கொடுக்கப்படும் என்பதை விளக்கி உங்களை ஒப்புக்கொள்ள வைப்பதிலேயே பலரும் குறியாக இருக்கின்றனர். இத்தகைய நபர்கள் வாயிலாக கட்டுமான பணிகளை துவக்கினால் பட்ஜெட்டை காட்டிலும் அதிக செலவு ஏற்படுவதை தடுக்க முடியாது.
இது விஷயத்தில், ரெடிமேட் விலைப்பட்டியலை தவிர்த்து, உங்கள் நிலத்தை நேரில் பார்த்து, ஆய்வு செய்து விலைப் பட்டியலை தயாரிக்க வேண்டும். நாங்கள் ஒரு பேக்கேஜ் வைத்திருக்கிறோம், அதில் உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள் என்ற நபர்களை தவிருங்கள்.
நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று அணுகினால், சம்பந்தப்பட்ட நிலத்தை நேரில் பார்வையிட்டு, அதில் எத்தகைய கட்டடம் கட்டலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே நேரம், உரிமையாளரின் விருப்பம், பட்ஜெட் என்ன என்பதை தெளிவாக விளக்கினால், வீடு கட்டும் பணிகள் எளிதாகும். ரெடிமேட் விலைப்பட்டியலுடன் பேக்கேஜ் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், கள ஆய்வில் கவனம் செலுத்துவதில்லை. இத்தகைய நபர்கள் வாயிலாக வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டால் அது உரிமையாளர்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது.
இதன் அடிப்படையில் உள்ளூர் அல்லது வெளியூரில் சம்பந்தப்பட்ட நிலத்தை பொறியாளர்களை அனுப்பி ஆய்வு செய்யும் பில்டர்களை தேடி கண்டுபிடியுங்கள். ஆன்சைட் முறையில் ஆய்வு செய்து, உரிமையாளரின் விருப்பம், விதிகளின் அடிப்படையில் சாத்தியக் கூறுகளை அறிந்து வீடு கட்ட வேண்டும்.
இவ்வாறு பொறியாளர்கள் ஆன்சைட் முறையில் ஆய்வு செய்வதால் உரிய வடிவமைப்பு எது என்பதை எளிதாக முடிவு செய்யலாம். இதன் அடிப்படையில் புதிய வீட்டுக்கான பட்ஜெட்டை தயாரித்து செயல்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

No comments:
Post a Comment