சொத்து பிரிப்பது தொடர்பாக மக்களிடம் காணப்படும் விருப்பங்கள் அவரவர் நிலையில் நியாயமானதாக இருக்கும். ஆனால், சட்ட வழிமுறைகள் என்பது தனி நபர்களின் விருப்பங்களை கடந்து பொது நலன், பொது நியாயத்தின் அடிப்படையில் அமைந்து இருக்கும்.
இதனால், தனிப்பட்ட முறையில் நமக்குள் என்ன விருப்பம் இருந்தாலும் சொத்து பங்கீட்டில் சட்ட ரீதியான நடைமுறைகளை கடைபிடிப்பது தான் நியாயமான வழிமுறையாக அமையும். இதில் வாரிசுகள் அனைவரின் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால், சில குடும்பங்களில், ஆண் வாரிசுகள் தங்களுக்குள் சொத்தை பங்கீட்டுக் கொண்டனர், பெண் வாரிசுகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று புகார் எழுகிறது. குறிப்பாக, இப்பிரச்னையை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அந்த குடும்பத்தில் சொத்து பங்கீட்டுக்கு முன்பே பெண் வாரிசுகள், தங்கள் பங்குக்கு இணையான பயன்களை பெற்று இருப்பார்கள்.
சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பது சட்டமானாலும், அதை பயன்படுத்துவதில் பெண்களின் அணுகுமுறை பல்வேறு குடும்பங்களில் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. சட்ட வழிமுறைகளை கருத்தில் வைத்து தான் இதை தீர்வு செய்ய வேண்டும்.
இன்னும் சில குடும்பங்களில், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையால் வாரிசுகளில் யாராவது ஒருவர் பிரிந்து சென்று இருப்பார்கள். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர்கள் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதே பிற வாரிசுகளுக்கு தெரியாத நிலையில், அவர்களுக்கு சொத்து பாகம் கொடுப்பதா என்பதில் குழப்பம் ஏற்படும்.
இவ்வாறு, சொத்து பங்கீட்டில் விடுபடும் நபர்கள், நீதிமன்றத்தை நாடும் போது, அது அனைத்து வாரிசுகளுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். ஒரு நபர் சட்ட ரீதியாக வாரிசு என்பது உறுதியாகும் நிலையில் அவரை தவிர்ப்பது பிற வாரிசுகளுக்கு பிரச்னையாக தான் முடியும்.
எனவே, சொத்துகளை பங்கு பிரிக்கும் போது, விடுபட்ட வாரிசுக்கான பங்கையும் தனியாக பிரித்து வைக்க வேண்டியது அவசியம். அவர் எப்போது வந்து கேட்டாலும் அதை கொடுப்பதற்கான வழிவகையை செய்வது நல்லது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

No comments:
Post a Comment