Wednesday, October 7, 2026

வீடுகளில் மேல்நிலை தொட்டி அமைப்பதில் கவனமாக இருக்கணும்!

பொதுவாக வீடு கட்டும் போது அதில் மின்சார விநியோகத்துக்கான ஒயரிங், தண்ணீர் விநியோகத்துக்கான பிளம்பிங் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இந்த பணிகளுக்கான திட்டமிடலில், வரைபடம் தயாரிப்பு, பொருட்களை வாங்குவது என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

புதிய கட்டடத்தில் மின்சார ஒயரிங் பணிகளுக்கு தரமான கேபிள்கள் வாங்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.  குறிப்பாக, எளிதில் தீ பிடிக்காத தன்மையுள்ள கேபிள்களை வாங்க வேண்டும் என்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதேபோன்று, கேபிள்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிவிசி குழாய்கள் விஷயத்திலும் தரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  கேபிள்களை அதிக விலை கொடுத்து தரமானதாக வாங்கினாலும், அது செல்லும் குழாய்களில் தரம் குறைந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பிளம்பிங் பணிகளில் பயன்படுத்தப்படும் பிவிசி குழாய்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.  கட்டடங்களில் மேல் நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்லும் நிலையில் என்ன அளவிலான குழாய் அமைய வேண்டும் என்று கவனமாக பார்க்க வேண்டும்.

பொதுவாக, மேல்நிலை தொட்டிகளில் இருந்து வீட்டின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் குழாய்களை அரை அங்குலம் வகையை சேர்ந்ததாக தேர்வு செய்கின்றனர்.  ஆனால், இதில், முக்கால் அங்குல குழாய்களை பயன்படுத்தும் போது தான் சீரான தண்ணீர் வினியோகத்தை உறுதி செய்ய முடியும்.

கட்டடங்களில் மேல் தளத்தில், சிமென்ட், செங்கல் பயன்படுத்தி தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வந்தன.  இதற்கு ஆகும் செலவுகள், பராமரிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் நினைக்கின்றனர்.

இதனால், பிவிசி பொருட்களால் தாயாரிக்கப்படும் மேல் நிலை தொட்டிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.  இதில், 2000 லிட்டர் முதல், 5000 லிட்டர் வரையிலான கொள்ளளவில் பிவிசி தண்ணீர் தொட்டிகள் தற்போது பரவலாக கிடைக்க தொடங்கியுள்ளன.

இத்தொட்டிகளை வாங்கி கட்டடத்தின் மேல் பகுதியில் எளிதாக அமைத்துவிடலாம்.  அதில் தேவையில்லாத குப்பைகள் சேராது, குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்தவும் வழி உள்ளது என்பதால், மக்கள் இதை தேர்வு செய்கின்றனர்.

ஆனால், மொட்டை மாடியில் இது போன்ற பிவிசி தண்ணீர் தொட்டிகளை அமைக்கும் போது, புயல், சூறாவளி காலத்தில் தண்ணீர் தொட்டி சேதம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு தீர்வாக தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் இடத்தை சுற்றி ஒன்னரை அடி உயரத்துக்கு செங்கல் சுவர் அமைப்பது பாதுகாப்பை ஏற்படுத்தும்.

புயல் காலத்தில் தண்ணீர் தொட்டி பாதிக்கப்படாமல் இருக்க இது போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள் .


No comments:

Post a Comment