Monday, September 28, 2026

சொத்து முன் ஆவணங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்!

புதிதாக ஒரு சொத்தை வாங்கும் போது அதை விற்பவர் யார், அவரிடம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பதையும், அவற்றின் உண்மை தன்மையையும் சரி பார்க்க வேண்டும்.  ஒரு நபர் சொத்து விற்க வருகிறார் என்றால், அவர் தான் உரிமையாளரா என்பதில் தொடங்கி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து பத்திரங்களின் பிரதிகளையும் முறையாக கொடுப்பர் என்று எதிர் பார்க்க முடியாது.  சில சமயங்களில் சொத்தை விற்கும் உரிமையாளர்கள் தங்கள் பெயருக்கு வந்த கிரைய பத்திரத்தின் அசல் பிரதி மட்டும் வைத்து இருப்பர்.

அதற்கு முந்தைய அசல் பத்திரம் அல்லது அதன் நகல் கூட தங்களிடம் இல்லை என்று கூறுவர்.  இன்றைக்கும், பல இடங்களில் சொத்து வாங்குவோர், அதற்கான கிரையப்பத்திரம் பதிவு செய்து கொடுத்தால் போதும், அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர்.

சிலரிடம் சொத்தின் தாய்ப்பத்திரத்தின் நகல் மட்டும் இருக்கும், அசல் பத்திரம் இல்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்வர்.

இது போன்ற சூழலில், முந்தைய பத்திரங்களின் அசலில் என்ன விபரங்கள் உள்ளன, விற்பனையாளர் காட்டும் நகல் பத்திரங்கள் உண்மை தானா என்று பார்க்க வேண்டும்.

இதற்கு, அந்த குறிப்பிட்ட பத்திரத்தின் எண், பதிவு செய்த ஆண்டு, சார்-பதிவாளர் அலுவலகம் ஆகிய விபரங்கள் இருந்தால் போதும்.

இந்த அடிப்படை விபரங்களை அளித்து உரிய முறையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

தற்போது, சொத்தின் நகல் பத்திரங்கள் பெற வேண்டுமானால், சார்-பதிவாளர் அலுவலகம் கூட செல்ல வேண்டியதில்லை.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வாயிலாக நகல் பத்திரங்கள் கோரி, கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும்.

ஆன்லைன் முறையில் பத்திர நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆவண எழுத்தர்கள் வாயிலாக அல்லது நீங்களே உங்கள் பெயரில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான பணியில் இறங்கும் முன், ஆதார் எண், இ-மெயில் முகவரி, மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.  ஒரு சொத்தின் பத்திரத்தின் நகல் வேண்டும் என்ற தேவை எழுந்தால், பதிவுத்துறையில் முறையாக விண்ணப்பித்தால் ஓரிரு நாட்களில் அது உங்களுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப் படும்.

இதை வைத்து அந்த சொத்தை வாங்குவது தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம்.


No comments:

Post a Comment