Wednesday, September 2, 2026

பழைய குடியிருப்பை புதுப்பிப்பதில் ‘யுடிஎஸ்’ பங்கீட்டில் கவனம் தேவை!

பொதுவாக கான்கிரீட்டை அடிப்படையாக வைத்து கட்டப்படும் கட்டடங்கள், 50 முதல் 60 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை.  ஆனால், இந்த கட்டடங்களை முறையாக பராமரித்தால் மட்டுமே இந்த அளவுக்கு ஆயுள் காலத்தை பெற முடியும்.

தமிழகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்து, 40 ஆண்டுகளே ஆகும் நிலையில், ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து புதிதாக கட்டப்படுகின்றன.  இந்த விஷயத்தில் கட்டடத்தின் முழு ஆயுள் காலம் என்பதை தவிர்த்து தேவை அடிப்படையில் மக்கள் செயல்படுகின்றனர்.


இதனால், 30 ஆண்டுகள் கடந்த நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து, பெரிய, புதிய கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்துள்ளன.  இவ்வாறு, பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து புதிய கட்டடங்கள் கட்டும் போது, பல்வேறு விஷயங்களில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.


இவ்வாறு பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றால், அதில் உள்ள அனைத்து உரிமையாளர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.  இதில் யாராவது ஒரு சிலர் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், மறு மேம்பாட்டு பணிகள் முடங்கும் நிலை இருந்தது.


ஆனால், தற்போது அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்தில் இது தொடர்பாக பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இத்திருத்தங்களின் அடிப்படையில், ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்பை இடித்து புதுப்பிக்க வேண்டும் என்றால் அதன் உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒப்புதல் அளித்தால் போதும்.


இதனால், ஒருசிலர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், இனி மறு மேம்பாட்டு திட்டங்கள் முடங்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்தபடியாக, தற்போது உரிமையாளர்கள் வைத்துள்ள நிலத்தின் பிரிபடாத பங்கு விஷயத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.


குறிப்பாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை மறுமேம்பாடு செய்வதனால், அதில் தற்போது உள்ளதைவிட கூடுதல் எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்படும்.  இவ்வாறு கூடுதலாக கட்டப்படும் வீடுகளுக்கு ‘யுடிஎஸ்’ எனப்படும் நிலத்தின் பிரிபடாத பங்கை எப்படி வழங்குவது என்பதை இறுதி செய்ய வேண்டும்.

இதனால், பழைய உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் வசம் தற்போது உள்ள ‘யுடிஎஸ்’ பங்கை கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்து, புதிய வீட்டை பெற வேண்டும்.  இதில், ஏற்கனவே இருந்ததில், 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் தான் ‘யுடிஎஸ்’ கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


எனவே, பழைய அடுக்குமாடி குடியிருப்பில் உரிமையாளர்கள் தற்போது வைத்துள்ள யுடிஎஸ் புதிய வீட்டை பெரும் போது பாதியாக அல்லது பாதிக்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது.  இந்த நடைமுறை மாற்றத்தை உரிமையாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:

Post a Comment