குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்கும் போது, நீங்கள் தேர்வு செய்யும் வீடு எந்த தளத்தில், எங்கு அமைந்துள்ளது என்பதை கவனித்து பார்க்க வேண்டும். வீட்டின் முகப்பு பகுதியில் போதிய அளவுக்கு இடவசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
பெரும்பாலான இடங்களில் மாடிப்படியும், பக்கத்து வீட்டு முகப்பும் சந்திக்கும் இடத்தில், உங்கள் வீட்டு முகப்பு அமைந்து இருந்தால் பயன்படுத்தும் போது பிரச்னை ஏற்படும். இது போன்ற வீடுகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் கிரில் கதவுகளை வெளிப்புறமாக திறப்பதும் பிரச்னையை ஏற்படுத்தும்.
இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக்குள் என்ன அளவுக்கு காற்றோட்டம், வெளிச்சம் வர வழி செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். இதில் மிக முக்கியமாக பெரும்பாலான மக்கள் பால்கனி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் வீடு தேடுகின்றனர்.
அடுக்குமாடி திட்டங்களில் புதிய வீடு வாங்கும் போது வரைபட நிலையிலேயே பால்கனி உள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, பால்கனி பகுதி இருக்கிறதா என்பதுடன், அதன் அளவுகள் விஷயத்திலும், வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது, அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்புற வடிவமைப்பு அழகு படுத்தும் பணி என்ற அடிப்படையில், பால்கனி அமைப்பு முறை மாற்றப்படுகிறது. இதன்படி, பால்கனியில், தடுப்பு சுவர் எப்படி அமைப்பது என்ற கேள்வி எழுகிறது.
பால்கனி அமைக்கும் போது அதன் தடுப்பு சுவரில், கான்கிரீட் சுவர் இருக்க வேண்டுமா, கிரில் கம்பிகள் போதுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதில் தற்போது, கிரில் கம்பிகள் அளவை குறைத்து, கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.
வெளியில் இருந்து பார்க்கும் போது இது அழகாக தெரிந்தாலும், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. கண்ணாடி எளிதில் உடைய கூடியது என்பதால் பால்கனியில் பாதுகாப்புகளை உறுதி செய்ய மாற்று வழிகளை நாட வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:
Post a Comment