சொந்தமாக வீடு கட்டும் நபர்கள் அதில் ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமீப காலமாக கட்டடத்தின் உறுதியில் கவனம் செலுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படக்கூடாது, மேல் தளத்தில் நீர்க்கசிவு ஏற்படக்கூடாது என்பதில் மக்கள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும், இதற்கு அப்பால் இன்னும் சில விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பெரும்பாலான கட்டடங்களில் கிணறு அல்லது போர்வெல் அமைப்புகள் வாயிலாக தண்ணீர் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் தண்ணீரை முறையாக இருப்பு வைத்து தேவையான இடத்துக்கு விநியோகிக்க கீழ்நிலை மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் அமைப்பது அவசியமாகிறது.
இது போன்ற தொட்டிகளை கான்கிரீட் பயன்படுத்தி அமைப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக கட்டடத்தின் மாடியில், மேல் நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது அதில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மொட்டை மாடியில் மேல்தளத்தில் இருந்து சற்று உயரத்தில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதில், மேல் தளத்தில் சிறு தூண்கள் அமைத்து அதில் தண்ணீர் தொட்டி அமைப்பது பாதுகாப்பான வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
தண்ணீர் தொட்டியில் அடிப்பாகம், கட்டடத்தின் மேல் தளத்தில் ஒட்டியபடி இருந்தால், அது கட்டடத்துக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மொட்டை மாடியில் கான்கிரீட் பயன்படுத்தி அமைக்கப்படும் தண்ணீர் தொட்டியில் நீர்க்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகளில், கட்டுமான பணியில் கூடுதல் கவனம் செலுத்தி நீர்க்கசிவு தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இப்படி மிகவும் கவனமாக செயல்பட்டு தண்ணீர் தொட்டி அமைத்து விட்டோம் என்று அமைதியாக இருந்துவிட கூடாது.
மூன்று அல்லது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டியில் நீர்க்கசிவு ஏற்படுகிறதா என்பதை உரிய வல்லுநர்கள் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். இதன் சுமையால் கட்டடத்தின் மேல் தலத்தில் விரிசல்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
தண்ணீர் தொட்டி விஷயத்தில் ஏற்படும் குறைபாடுகள் கட்டடத்தின் ஒட்டுமொத்த உறுதி தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உரிமையாளர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

No comments:
Post a Comment