Thursday, September 24, 2026

புதிய வீடு கட்ட ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் வழிமுறைகள்!

வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் ஏற்படும் முன்னேற்றங்களின் ஒரு அலகாக சொந்த வீடு இருப்பது பார்க்கப் படுகிறது.  ஒரு வீடு என்பது உங்களுக்கான உறைவிடம் என்பதை கடந்து, பல்வேறு விஷயங்களில் அடையாளமாக நிற்கிறது.

குறிப்பாக, இன்று நீங்கள் கட்டும் புதிய வீடு என்பது தலைமுறைகள் கடந்து நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்க வேண்டும்.  இதற்கு யார் வாயிலாக அந்த வீடு கட்டப்படுகிறது என்பதில், தெளிவான முடிவுகளை உரிமையாளர்கள் எடுக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக புதிய வீட்டை கட்டும் பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பதே வழக்கமான நடைமுறையாக உள்ளது.  இதில் நீங்கள் வாங்கிய நிலம் அமைந்துள்ள பகுதி குறித்து அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

இதற்கு அடுத்தபடியாக, ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் நிலையில் அவரிடம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.  ஒரு ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் முன் அவர் இதுவரை செயல்படுத்தி திட்டங்கள் குறித்து விசாரியுங்கள்.  முந்தைய திட்டங்களில் வீடு வாங்கியவர்களுடன் அவருக்கு நல்ல முறையில் தொடர்பு இருக்கிறதா அல்லது தகராறு இருக்கிறதா என்று பாருங்கள்.  அவர் என்ன வகையான ஒப்பந்தத்தில் இதுவரை செயல்பட்டு இருக்கிறார் என்பதை தெளிவாக கேட்டு அறிய வேண்டும்.


புதிய வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் பெறும் நபர், என்ன பிரிவு பொறியாளர் என்பதை விசாரிப்பது அவசியம்.  இது மட்டுமல்லாது, கட்டட வரைபடம் தயாரிப்பு தொடர்பான விஷயங்களில் அவரது திட்டம் என்ன என்பதையும் கேட்டு பாருங்கள்.


இதில் அனைத்து பணிகளையும் நானே பார்த்து கொள்கிறேன் என்று கூறும் நபர்கள் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட வேண்டும்.


ஒரு கட்டடத்துக்கு கட்டட அமைப்பியல் பொறியாளர், வடிவமைப்பாளர் ஆகியோரை பயன்படுத்த வேண்டியது அவசியம்.  இதற்கு அடுத்தபடியாக, கட்டட வரைபடத்துடன் நின்றுவிடாமல், மண் பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளாரா என்று பாருங்கள்.

சில இடங்களில் கட்டுமான பொறியாளர்கள், தங்களுக்கு இருக்கும் அனுபவம் அடிப்படையில் மண்ணின் தரம் தொடர்பான விஷயங்களில் தாங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.  மேலும், ஒரு கட்டடத்தில் அடிப்படை வரைபடத்தை கடந்து, கட்டட அமைப்பியல் வரைபடம், மின்சார ஒயரிங், பிளம்பிங், செயல்பாட்டு வரைபடம் போன்றவற்றை தயாரிப்பாரா என்றும் கேட்டு பார்த்து அதன் அடிப்படையில் சரியான நபரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

No comments:

Post a Comment