தரமான முறையில் அஸ்திவாரம் அமைத்து சிறப்பாக கட்டப்பட்ட கட்டடம் என்றாலும் அதில் பயன்பாட்டு நிலையில் எதிர்பாராத சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அஸ்திவார தூண்கள், பீம்கள், மேல் தளம் என அனைத்து பாகங்களையும் பார்த்து பார்த்து கட்டினாலும், சில இடங்களில் புதிதாக பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
தரமான பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு என்ற நம்பிக்கையில் நீங்கள் வசித்து வரும் நிலையில், அதில் திடீரென ஏற்படும் பள்ளம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில இடங்களில் தரைதள கட்டடத்தில் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் உடைந்து நொறுங்குவதை பார்த்து இருப்போம்.
தரையில் பதிகற்கள் உடையும் நிலையில் அதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்து அதை சரி செய்ய வேண்டும். இதில் சில இடங்களில், ஒரு அறையில் ஒட்டுமொத்த தரையும் வெள்ளத்தால் அடித்து செல்லப்படுவது நடக்கிறது.
ஒரு நிலத்தை தேர்வு செய்து அதில் தூண்கள், பீம்கள் அமைத்து, சுவர் எழுப்பி வீடு கட்டி இருப்பார்கள், தரை மட்ட பகுதியில் மண் கொட்டி, அதன் மேல் பதிகற்கள் கொண்டு தரை அமைத்து வீட்டை இயல்பான முறையில், பயன்படுத்தி வந்து இருப்பார்கள்.
திடீரென மழை பெய்து அக்கம் பக்கத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இந்த கட்டடத்தின் ஒரு அறையில் ஒட்டுமொத்த தரையும் அடித்து செல்லப்பட்டு இருக்கும். கட்டடத்தில் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொட்டப்பட்ட மண் மொத்தமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.
வீட்டின் அறையில் ஒட்டுமொத்த தரை பகுதியும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட வாய்ப்பு உள்ளதா என்பது பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது. நீங்கள் தேர்வு செய்ய நிலம் இதற்கு முன் என்னவாக இருந்தது என்பதை கவனிக்காததால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படும் .
பொதுவாக நிலத்தில் குறிப்பிட்ட சில வழித்தடங்கள் மழைக்காலத்தில் தண்ணீர் செல்லும் பாதையாக இருக்கும். காலப்போக்கில் இந்த வழித்தடங்கள் மறைந்த நிலையில் மக்கள் கவனிக்காமல் கட்டடம் கட்டும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அந்த பாதையில் தண்ணீர் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், திடீரென அதிக அளவு மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, குறிப்பிட்ட சில பழைய பாதைகளை கண்டுபிடித்து தண்ணீர் பாய்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment