எதிர்காலத்தில் வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் மக்கள் காலி மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு காலிமனைகளை வாங்கியவர்கள் அதில், மரங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமான நடைமுறை தான்.
இதன்படி, காலி மனையில் பல்வேறு வகை மரங்களை வளர்ப்பவர்கள், அதில் வீடு கட்டும் போது பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எதிர்காலத்தில் வீடு கட்டும் வரை, நிலத்தை காலியாக வைக்காமல் அதில் மரங்கள் வளர்ப்பதால் பயன் கிடைக்குமே என்று மக்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் காலி நிலத்தில் மரம் வளர்ப்பதால், உரிமையாளருக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதுடன், சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால், இப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் மரங்களால் அந்த நிலத்தில் வீடு கட்டும் போது பல்வேறு புதிய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
பெரும்பாலான சமயங்களில், நிலம் வாங்குவோர், அதன் மையப்பகுதியில் வீடு கட்ட இடம் விட்டு, ஓரங்களில் மரங்கள் வளர்க்கின்றனர். இந்த மரங்களால் அங்கு எதிர்காலத்தில் கட்டப்படும் வீட்டுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும்.
எனவே, காலி நிலங்களின் ஓரங்களில் மரம் நடும் நிலையில், அதிக அளவுக்கு வேர் பரவும் வகையை சேர்ந்த மரங்களை தவிர்ப்பது நல்லது. அதிக தொலைவுக்கு வேர் பரவும் மரங்களை நட்டால் அங்கு கட்டப்படும் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நிலத்தின் ஓரத்தில் தான் மரங்களை வளர்க்கிறோம் என்றாலும், அதன் வேர்கள் பல்வேறு பக்கங்களில் பரவ வாய்ப்புள்ளது. இதில் மனையின் மையப்பகுதியில் கட்டடம் கட்டும் போது அதன் அடியில் மரத்தின் வேர்கள் ஊடுருவ வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தற்போது பெரும்பாலான கட்டடங்கள், பிரேம்டு ஸ்டிரக்ட்சர் என்ற முறையில், தூண்கள், பீம்கள் அமைத்து தான் கட்டப்படுகின்றன. இதில் பக்கவாக்கில் இருக்கும் மரத்தின் வேர்கள் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பரவ வாய்ப்புள்ளது.
இப்படி, தொடர்ந்து பரவும் வேர், குறிப்பிட்ட காலத்தில் வெளிப்புறத்தில் மரத்தின் கிளைகள் போன்று தடிமனாக வளர வாய்ப்புள்ளது. நிலத்தில் மண் அடுக்குகளுக்கு இடையில் செல்லும் வேர்கள் படிப்படியாக வளரும் நிலையில் மண் அடுக்குகளை தாண்டி, கட்டடத்தின் நிலைப்பு தன்மையை பாதிக்கும்.
இவ்வாறு நிலத்துக்கு அடியில் செல்லும் வேர்கள் வளர்வது வெளிப்படையாக தெரியாது. வேர்கள் வளர்ந்து, அதனால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படும் போது அதற்கான காரணங்களை ஆராயும் போது தான் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரியவரும்.
எனவே, காலி மனையில் மரங்கள் வளர்க்கும் போது எதிர்காலத்தில் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

No comments:
Post a Comment