Friday, June 26, 2026

வீடு கட்டும் போது கறையான் தடுப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

புதிதாக வீடு கட்டும் போது ஒவ்வொரு நிலையிலும் சரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.  நிலத்தை சமன்படுத்தி அதில் அஸ்திவாரத்துக்கான பணிகளை மேற்கொள்ளும் போது என்னென்ன விஷயங்களை எப்படி அணுக வேண்டும் என்பதிலேயே மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

சமீப காலமாக பெரும்பாலான இடங்களில் தரமான முறையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக நினைக்கும் இடங்களில் கறையான் பாதிப்பு வருவதை பார்க்க முடிகிறது.  கான்கிரீட் கட்டடங்களில் கறையான் பாதிப்பு ஏற்படுமா என்பதிலேயே பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.


பொதுவான மண்ணை பயன்படுத்தி வீடு கட்டும் போது தான் கறையான் பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  ஆனால், கான்கிரீட் கட்டடங்களிலும், நிலத்துடன் இணைப்பு ஏற்படும் இடங்களில் கறையான் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.


குறிப்பாக, ஒரு நிலத்தில் அஸ்திவாரம் அமைத்து, தரை மட்டம் வரையிலான பணிகள் முடிக்கும் போது ஏற்படும் இடைவெளியை மண் கொட்டி நிரப்புகிறோம்.  இதற்கு களி மண் பயன்படுத்த கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.


இதனால், சரளை மண் போன்றவை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.  இந்த நிலையில், அங்கு கொட்டப்படும் மண் நன்றாக இறுக்கம் அடைய வேண்டும் என்று தண்ணீர் ஊற்றப்பட்டு உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


இவ்வாறு மண் கொட்டப்பட்ட நிலையில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு குழி, அரை அடி ஆழத்தில் தோண்ட வேண்டும்.  அதில், கறையான் தடுப்பு மருந்து ஊற்றப்படும், இதனால், கறையான் தடுப்பு பணிகள் முடிந்துவிட்டதாக மக்கள் பரவலாக, நினைக்கின்றனர்.


ஆனால், அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் மண் பகுதியில் கறையான் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும்.  அதன் பின் ‘பிசிசி’ கான்கிரீட் போட்ட பின்னும் அதன் ஓரங்களில் கறையான் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்.


இதற்கு அப்பால், தரை மட்டம் வரையிலான கட்டு வேலை முடிந்த நிலையில் மண் கொட்டும் போது, ஒவ்வொரு அடுக்கிலும் கறையான் தடுப்பு மருந்துகள் தெளித்து, அதன் பின் அடுத்த அடுக்கு மண் கொட்டினால், கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்.


இதில் உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் கறையான் தடுப்பு பணிகளை மொத்த கட்டுமான பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும்.  இதற்கான செலவை ஆரம்பத்திலேயே பேசி முடித்தால் மட்டுமே கறையான் தடுப்பு நடவடிக்கைகள் பலன் கொடுக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


No comments:

Post a Comment