Thursday, December 11, 2025

பத்திரம், பட்டா சரியா இருக்கும் மனைக்கு அங்கீகாரம் அவசியமா?


இன்றைய சூழலில், எது சம்பந்தப்பட்ட தகவல் ஆனாலும் இணையதளத்தில் சில நிமிடங்களில் எளிதாக கிடைத்துவிடுகின்றன.  அதே நேரத்தில், இணையதள சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

வீடு, மனை வாங்குவதிலும், பல்வேறு அடிப்படை தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இணையதளங்கள் மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளன.  குறிப்பாக, ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அது குறித்த ஒருசில அடிப்படை தகவல்கள் மட்டும் இருந்தால் போதும், முழுமையான விசாரிப்புகளை முடித்து விடலாம்.

வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து ஒரு சொத்தை வாங்கும் போது அது உண்மையிலேயே முறையாக உள்ளதா, சட்ட ரீதியாக பிரச்னை எதுவும் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.  பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டும் போதாது, நகர், ஊரமைப்பு சட்டப்படி அந்த மனை அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் விற்பனைக்கு உயர் நீதிமன்ற கிடுக்கிப்பிடியால் அரசு தடை விதித்துள்ளது.  இதனால்,புதிதாக விற்பனைக்கு வரும் பெரும்பாலான வீட்டு மனைகள் முறையான அங்கீகாரத்துடன் வருகின்றன.

இந்நிலையில், காலி மனை வாங்கும் போது தான், அதன் அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், வீடு இருக்கும் நிலையில் அங்கீகாரம் பார்க்க வேண்டாம் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது.  தொடர்ந்து பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் நிலத்துக்கு அங்கீகாரம் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் உள்ளது.

ஆனால், நீங்கள் தனி வீடு, அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போது அது அமைந்துள்ள மனை முறையாக அங்கீகாரம் பெற்றதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.  அங்கீகாரம் இல்லாவிட்டால் அங்கு வீடு கட்ட அனுமதி கொடுத்திருப்பார்களா என்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து கொண்டு பலரும் அமைதியாகி விடுகின்றனர்.


ஆனால், பல இடங்களில், 2016க்கு முன் அங்கீகாரம் இன்றி விற்கப்பட்ட மனைகளில் முறையான அனுமதி இன்றி வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.  இதற்கு உள்ளூர் அளவில் ஒரு பொறியாளரை அணுகினால், அவர் ஒரு வரைபடத்தை போட்டு கொடுத்து விடுவார்.


அந்த வரைபடத்தையே அடிப்படை ஆவணமாக வைத்துக்கொண்டு பலரும் வீடு விற்பனையில் இறங்கியுள்ளனர் என்பதால், மக்கள் இதில் மிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.  ஒரு சொத்தை வாங்குவதற்காக பார்க்கும் போது, அதன் பத்திரங்களுக்கு அப்பால், மனைப்பிரிவு வரைபடம், அதில் அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான சம்பந்தப்பட்ட துறையின் முத்திரை விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.


அந்த வரைபடத்தின் உண்மை தன்மையை சம்பந்தப்பட்ட துறை அலுவலரை அணுகி சரிபார்த்துக் கொள்வது அவசியம்.  முதலில், மனைப் பிரிவு, மனை வரைபடத்தை ஆராய்ந்த பின், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கான வரைபடம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்யனும்.


பத்திரம், பட்டா ஆகியவற்றுக்கு அப்பால் மனைப் பிரிவு அங்கீகார வரைபடம் போன்ற ஆவணங்களையும் சரி பார்ப்பது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

No comments:

Post a Comment