தமிழகத்தில்
சொத்து விற்பனைக்கான பத்திரங்களை பதிவு செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில்,
பத்திரப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக, சொத்து வாங்குவோர், புதிதாக தயாரிக்கப்பட்ட கிரைய பத்திரத்தை பதிவு செய்யும் போது சில விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதில் பதிவுக்கு அனுப்ப பத்திரங்களை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலானோர், ஆவண எழுத்தர்களின் உதவியையே இதற்கு பெறுகின்றனர். ஆவண எழுத்தர்கள் சொல்லும் வழிமுறைகளின் படியே பத்திரங்கள் பதிவுக்கு அனுப்பப்படுகின்றன.
குறிப்பிட்ட சில அலுவலங்களில் பத்திரத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதுவும் ஆவண எழுத்தர் நிலையிலேயே திருப்பி அனுப்பப்படுவதும் உண்டு. இவ்வாறு, பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதற்கான முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணங்களை செலுத்துவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, சொத்தின் மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரைத் தீர்வையாகவும், நான்கு சதவீதம் பதிவு கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை எப்படி செலுத்த வேண்டும் என்பதில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
பதிவுத்துறை அறிவித்துள்ள நடைமுறைகளின்படி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். இதில், 5 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையை, டி.டி., எனப்படும் வங்கி வரைவோலையாக செலுத்தலாம்.
இதில் கடைசி நிமிடத்தில் தெரியவரும் வேறுபாட்டு தொகை, 1,000 ரூபாய்க்குள் இருப்பின் அது, பி.ஓ.எஸ்., மிஷின்கள் வாயிலாக வசூலிக்கப்படும். இந்த நடைமுறை தற்போது முழுமையாக அமலில் உள்ளது.
சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் கட்டண நடைமுறை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. மற்ற மண்டலங்களில் படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையை மக்கள் புரிந்து கொண்டால், எவ்வித சிக்கலும் இன்றி பத்திரங்களை பதிவு செய்து விடலாம் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.

No comments:
Post a Comment